the ending knot | முடிக்கும் முடிச்சுகள்

By and | 31 October 2020

மாதுளை முத்துக்களாய் ஈரத்தரையில் சிதறும்
கடந்த காலங்களில் நழுவிக் கொண்டு
ஞாற்றுக்கிழமை சந்தையில் மறைகிறது
நரைத்த கூட்டம்

சம்பாலை விலைப்பேசும் அதே கணம்
நெத்திலி மீன் கடைக்காரரிடம்
மிச்சக் காசை வாங்க மறக்கும் கோகிலா பையிலிருந்து
மீண்டும் சறுக்கி விழும் சில்லைரைகள்
சிரிக்கும் சத்தம் எதிரொலிக்கிறது

தலை இழந்த முண்டங்களாக வரிசையில்
தொங்கப்பட்ட கருப்புக் கோழிகளின்
விலை கேட்டு மைக்கிள் அதிர்ந்து பொகிறான்
பேரம் பேசவதற்குள் பணம் நீட்டி
அவன் வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள் பேத்தி

பழக்கடையில்
பப்பாளிச் சாறை உறிஞ்சும் அதே உதடுகள்
எண்பதுகளில் இச்சந்தைக்கு அருகே இருந்த
பள்ளியை காணவில்லை என்று புகார் செய்கின்றன

முள்ளங்கியை மென்று தின்னும் புதுப்பற்கள் கூவுகின்றன
ஐம்புதகளில் தன்னிடமிருந்த மலேசியா
கடவுச்சீட்டை யாரோ வீட்டில் தூக்கி வீசிய சங்கடத்தைப்பற்றி

மறையும் தடாகத்தின் நீர்போன்று
வற்றிக்கொண்டே போகும் ஞாபகங்கள்

கடைசி பக்கங்களை தொலைத்த இவர்கள்
தினமும் புதுக்கண்ணாடி அணிந்து
எழுதகிறார்களோ முடிக்கும் முடிச்சுகளை?

This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

Comments are closed.