A Magical Aquarium Called the Ocean | கடலெனும் வசீகர மீன்தொட்டி

By and | 31 October 2020

ஈரச்சந்தையில் மீன் வெட்டுபவன்
கையளவு நீரள்ளித் தெளித்து
வாய்பிளந்து துடித்துக்கொண்டிருக்கும்
ஞாயிற்றுக்கிழமைகளை எழுப்புகிறான்

தனித்திருக்கும் தன்னுடல் சிலுப்பி
நிறைந்திருக்கும் வெற்றுக் காற்றை
பெருங்காமத்தில் தவிப்பவனின் அவசரத்தோடு
அள்ளி அள்ளி விழுங்குகிறது
சுவாசித்தலுக்குக் காத்திருக்கும் ஆண் மீன்.

உலர்ந்துபோன இன்னொரு தேசத்தில்
தாம்பத்யத் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும்
பெண் மீனுக்கு அலைபேசியில் வந்து சேர்கிறது
பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில்
ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை.

நீர்த்துளிகள் உருண்டோடும் வாழை இலையில்
மீன் துண்டுகளைப் பரிமாறிவிட்டு
காத்திருக்கத் தொடங்கும் அவள் கரங்களில்
ரகசியமாய் உதடுகள் குவித்து நீந்துகின்றன
ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள்

சிலிர்த்தடங்கும் உடல் வளைத்து
செதில்களின் நுனிகளில் வியர்வை அரும்ப
வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது
பகிர்ந்துகொள்ளப்படாத காமம்.

இரு தேசங்களுக்கு இடையில்
வசீகர மீன்தொட்டியாய்
விரிந்து கிடக்கிறது கடல்.

This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

  • No Related Posts Found

Comments are closed.