Our home ocean | எங்கள் வீட்டுச் சமுத்திரம்

By and | 31 October 2020

என் அபிப்பிராயங்கள் அனைத்தையும்
வழவழப்பான கூழாங்கற்களாக்கி
வீட்டு வரவேற்பறையில் உள்ள
மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன்.

‘நல்ல விலைக்கு வந்தால் ஒரு கடலும்
வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா.

இன்று ஞாயிற்றுக்கிழமை
இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம்.

‘மாதாந்திர வாடகைக்கு
பௌர்ணமி அலைகள் சகிதம்
சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன்

சமுத்திரம் வாங்கி வந்ததில்
மனைவியும் லலிதாவும் மகிழ்ந்தார்கள்.

சமுத்திரத்தையே முறைத்துப்
பார்த்துக் கொண்டிருந்தது
எங்கள் வீட்டுப் பூனை.

‘சீ அதற்கென்ன தெரியும்
சனியன் நேற்று வந்ததுதானே’ என்றேன்.

சுகாதார அதிகாரி சமுத்திரத்தைப்
பார்த்துவிட்டுப் போனான்.

அவன் பட்டியலில் சமுத்திரம் இல்லை.

‘அடுத்து ஆமை வாங்கலாம்’ என்று
அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா மறுத்தாள்.
புல்லாங்குழல் வைத்திருக்கும்
கிருஷ்ணன் பொம்மைபோல்
ஆமை வீட்டுக்குக் கேடு.
எல்லாம் ஊதிக்கொண்டு போய்விடும்.

மீனும் திமிங்கிலமும் ஆமையும்
பிய்த்துப் போட்ட ரொட்டித் துண்டுகளாய்ச்
சூரிய வெளிச்சமும்
நீர் மட்டத்தின் மீதிருக்க
பசியோடு சுருண்டு படுத்திருக்கிறது
எங்கள் வீட்டுச் சமுத்திரம்.

This entry was posted in 99: SINGAPORE and tagged , . Bookmark the permalink.

Related work:

  • No Related Posts Found

Comments are closed.